Wednesday, October 5, 2011

சிவ மந்திரம்

 சிவ மந்திரம்

சிவனுக்கு ஐந்து முகங்கள் அவையாவன,நான்கு திசைகளுக்கொரு முகம்,ஐந்தாவது முகம் ஆகாயத்தை நோக்கியது.கிழக்கில்'தத்புருஷம்',தெற்கில்'அகோரம்', வடக்கில் 'வாமதேவம்',
மேற்கில்'சித்தியோசம்', உச்சியில்'ஈசானம்'.கருவூரார் எனப்படும் கருவூர் சித்தர் இந்த ஒவ்வொரு முகத்திற்குமான பல மந்திரங்களை அருளியுள்ளார்.

பொதுவில் மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்....




 





தத்புருஷ மந்திரம்
இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.


அகோர மந்திரம்
இதன் மூல மந்திரம் "நமசிவ",

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்


வாமதேவ மந்திரம்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.


சத்யோசாத மந்திரங்கள்


"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்


ஈசான மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.


திருச்சிற்றம்பலம்               திருச்சிற்றம்பலம்                    திருச்சிற்றம்பலம

Monday, September 26, 2011

கீர்த்தித் திரு அகவல்

       (தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

    திருச்சிற்றம்பலம்  தில்லை மூதூர் ஆடிய திருவடி  பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி  எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி  மண்ணும் விண்ணும் வானோர் உலகும்  துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5  என்னுடை இருளை ஏறத்துரந்தும்  அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்  குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்  மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்  சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10  கல்லா டத்துக் கலந்து இனிது அருளி  நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்  பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்  எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்  கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15  விராவு கொங்கை நல்தடம் படிந்தும்  கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்  மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்  மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து  உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் 20  நந்தம் பாடியில் நான் மறையோனாய்  அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்  வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்  நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி  ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25  கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்  குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக்  சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்  வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்  கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30  தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்  வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்  மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி  சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்  அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35  நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்  ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி  பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று  ஈண்டு கனகம் இசையப் பெறா அது  ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40  தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்  அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி  இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்  மதுரைப் பெருநல் மாநகர் இருந்து  குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45  ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப்  பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்  உத்தர கோச மங்கையுள் இருந்து  வித்தக வேடங் காட்டிய இயல்பும்  பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50  தூவண மேனி காட்டிய தொன்மையும்  வாத வூரினில் வந்து இனிது அருளிப்  பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்  திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக்  கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55  பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்  பாவம் நாசம் ஆக்கிய பரிசும்  தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து  நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்  விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60  குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்  பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு  அட்ட மாசித்தி அருளிய அதுவும்  வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு  காடு அது தன்னில் கரந்த உள்ளமும் 65  மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு  தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்  ஓரி ஊரில் உகந்து இனிது அருளி  பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்  பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70  தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்  கோவார் கோலம் கொண்ட கொள்கையும்  தேன் அமர் சோலைத் திரு ஆரூரில்  ஞானம் தன்னை நல்கிய நன்மையும்  இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75  படிமப் பாதம் வைத்த அப்பரிசும்  ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து  பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்  திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து  மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80  சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்  பாவகம் பலபல காட்டிய பரிசும்  கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்  ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்  ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85  துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்  திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்  கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்  கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்  புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90  குற்றாலத்துக் குறியாய் இருந்தும்  அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து  சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு  இந்திர ஞாலம் போலவந்து அருளி  எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் 95  தானே ஆகிய தயாபரன் எம் இறை  சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி  அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்  சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்  மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100  அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்  எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்  ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு  நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்  ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105  ஆனந் தம்மே ஆறா அருளியும்  மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்  நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்  அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்  கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110  மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்  தூய மேனிச் சுடர்விடு சோதி  காதலன் ஆகிக் கழுநீர் மாலை  ஏல் உடைத்தாக எழில்பெற அணித்தும்  அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115  பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்  மீண்டு வாராவழி அருள் புரிபவன்  பாண்டி நாடே பழம்பதி ஆகவும்  பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்  உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120  ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய  தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்  இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி  அருளிய பெருமை அருள்மலை யாகவும்  எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125  அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி  நாயினேனை நலம்மலி தில்லையுள்  கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன  ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி  அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130  ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்  எய்த வந்திலாதார் எரியில் பாயவும்  மாலது வாகி மயக்கம் எய்தியும்  பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்  கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135  நாத நாத என்று அழுது அரற்றி  பாதம் எய்தினர் பாதம் எய்தவும்  பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற  இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்  எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140  பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்  கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு  அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை  இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்  பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145  ஒலிதரு கைலை உயர்கிழ வோனே  திருச்சிற்றம்பலம்

Tuesday, August 2, 2011

போற்றி திருஅகவல்



மாணிக்கவாசகரின் போற்றி திருஅகவல்





நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்
றடிமுடி யறியும் ஆதர வதனிற்
கடுமுரண் ஏன மாகி முன்கலந்
தேழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்
தூழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்
வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில்
யானை முதலா எறும்பீ றாய
ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்
தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் நூறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படுந்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்
தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்
தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்
பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்
செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்
நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும்
புல்வரம் பாய பலதுறைப் பிழைத்துந்
தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின
ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்
பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்
விரத மேபர மாகவே தியருஞ்
சரத மாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாத மென்னுஞ்
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்
துலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி
அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகது போலத்
தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்
தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் லிடையறா அன்பிற்
பசுமரத் தாணி அறைந்தாற் போலக்
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றிச்
சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
கதியது பரமா அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா
தருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை
என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித் திருதயம் மலரக்
கண்களி கூர நுண்துளி அரும்பச் 85
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின்னா ருருவ விகிர்தா போற்றி
கல்நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்றனக் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரைசேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழா மேயருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரையுணர் விறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானோர் நோக்கி மணாளா போற்றி
வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி
இடைமரு துறையும் எந்தாய் போற்றி
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி
குற்றா லத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி
களங்கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்ற நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி
உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றிமணாளா போற்றி
பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
இலங்கு சுடரெம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநா டுடைய மன்னே போற்றி
கலையா ரரிகே சரியாய் போற்றி
திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவரி தாகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட் கன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி
தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி
மந்தர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன் றருளினை போற்றி
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி
படியுறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடுவீ றானாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி
புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண
போற்ற போற்றி சயசய போற்றி .
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம

Sunday, July 17, 2011

சிவபுராணம்

சிவபுராணம்



தொல்லை யிரும்பிறவி சூழும் தளை நீக்கிஅல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதேஎல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.




நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான் 20

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே! தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95


திருச்சிற்றம்பலமதிருச்சிற்றம்பலமதிருச்சிற்றம்பலம


பொழிப்புரை : 
திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந் தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தி யினது திருவடி வாழ்க! ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க! மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக! பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக! தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாத வனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக! கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக! கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக!
ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவ பிரானது திருவடிக்கு வணக்கம். அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். தெவிட்டாத இன்பத்தைக் கொடுக் கின்ற மலைபோலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், சிவபெரு மானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவ னுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினைமுழுமையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்.
வானமாகி நிறைந்தும் மண்ணாகி நிறைந்தும் மேலானவனே! இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி மனத்தைக் கடந்து அளவின்றி நிற்பவனே! உன்னுடைய மிக்க சிறப்பை, கொடிய வினையை உடையவனாகிய யான், புகழுகின்ற விதம் சிறிதும் அறி கிலேன். புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும் பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும், பூதகணங்களாகியும், வலிய அசுரராகி யும், முனிவராகியும், தேவராகியும் இயங்குகின்ற இந்த நிலையியற் பொருள் இயங்கியற் பொருள் என்னும் இருவகைப் பொருள் களுள்ளே எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, யான் மெலிவடைந்தேன். எம் பெருமானே! இப்பொழுது உண்மையாகவே, உன் அழகிய திருவடிகளைக் கண்டு வீடு பெற்றேன்.
நான் உய்யும்படி என் மனத்தில் பிரணவ உருவாய் நின்ற மெய்யனே! மாசற்றவனே! இடபவாகனனே! மறைகள், ஐயனே என்று துதிக்க உயர்ந்து ஆழ்ந்து பரந்த நுண் பொருளானவனே! வெம்மை யானவனே! தண்ணியனே! ஆன்மாவாய் நின்ற விமலனே! நிலையாத பொருள்கள் யாவும் என்னை விட்டு ஒழிய, குருவாய் எழுந்தருளி மெய்யுணர்வு வடிவமாய், விளங்குகின்ற உண்மை ஒளியே! எவ் வகை யான அறிவும் இல்லாத எனக்கு இன்பத்தைத் தந்த இறைவனே! அஞ்ஞானத்தின் வாதனையை நீக்குகின்ற நல்ல ஞானமயமானவனே! தோற்றம், நிலை, முடிவு என்பவை இல்லாதவனே! எல்லா உலகங்களையும் படைப்பாய்; நிலை பெறுத்துவாய்; ஒடுக்குவாய்; அருள் செய்வாய்; அடியேனைப் பிறவியிற் செலுத்துவாய்; உன் தொண்டில் புகப் பண்ணுவாய்; பூவின் மணம் போல நுட்பமாய் இருப்பவனே! தொலைவில் இருப்பவனே! அண்மையில் இருப்பவனே! சொல்லும் மனமும் கடந்து நின்ற வேதப் பொருளாய் உள்ளவனே! சிறந்த அன்பரது மனத்துள் கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடின போல இன்பம் மிகுந்து நின்று, எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!
ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால் உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே மாசற்றவனே! உன்பொருட்டுப் பொருந்தின அன்பை உடையேனாய், மனம் கசிந்து உருகுகின்ற நன்மையில்லாத சிறியேனுக்குக் கருணைபுரிந்து பூமியின்மேல் எழுந்தருளி நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத் தாயினும் மேலாகிய அருள் வடிவான உண்மைப் பொருளே!
களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, பூப்போன்ற சுடரே! அளவிலாப் பேரொளியனே! தேனே! அரிய அமுதே! சிவபுரத்தை யுடையானே! பாசமாகிய தொடர்பையறுத்துக் காக்கின்ற ஆசிரியனே! அன்போடு கூடிய அருளைச் செய்து என் மனத்தில் உள்ள வஞ்சம் அழிய, பெயராமல் நின்ற பெருங்கருணையாகிய பெரிய நதியே! தெவிட்டாத அமிர்தமே! எல்லையில்லாத பெருமானே! ஆராயாதார் மனத்தில் மறைகின்ற ஒளியை யுடையானே! என் மனத்தை நீர் போல உருகச் செய்து என் அரிய உயிராய் நின்றவனே! சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே! அன்பர் பொருட்டு அவைகளை உடையவனே! அன்பர்களிடத்து அன்புடைவனே! கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, தன்மையினால் அல்லாதவனும் ஆகின்ற பேரொளியை யுடையவனே! நிறைந்த இருளானவனே! புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே! முதல்வனே! முடிவும் நடுவும் ஆகி அவையல்லாது இருப்பவனே! என்னை இழுத்து ஆட்கொண்டருளின எமது தந்தையாகிய சிவபெருமானே! மிகுந்த உண்மை ஞானத்தால் சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே! ஒருவரால் நுட்பம் ஆக்குதல் இல்லாத இயற்கையில் நுட்பமாகிய அறிவே! போதலும் வருதலும் நிற்றலும் இல்லாத புண்ணியனே! எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே! காண்பதற்கரிய பெரிய ஒளியே! மகாநதி போன்ற இன்பப் பெருக்கே! அப்பனே! மேலோனே! நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும் சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகி யும் மாறுபடுதலையுடைய உலகத்தில் வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவாய் விளங்கும் தெளிவானவனே! தெளி வின் தெளிவே! என் மனத்துள் ஊற்றுப் போன்ற பருகுதற்குப் ெபாருந்திய அமிர்தமே! தலைவனே!
வெவ்வேறு விகாரங்களையுடைய ஊனாலாகிய உடம் பினுள்ளே தங்கிக் கிடக்கப்பெற்று ஆற்றேன் ஆயினேன். எம் ஐயனே! சிவனே! ஓ என்று முறையிட்டு வணங்கித் திருப்புகழை ஓதியிருந்து அறியாமை நீங்கி அறிவுருவானவர்கள் மறுபடியும் இவ்வுலகில் வந்து, வினைப் பிறவியையடையாமல், வஞ்சகத்தை யுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை அறுக்க வல்லவனே! நடு இரவில் கூத்தினைப் பலகாலும் பயிலும் தலைவனே! தில்லையுள் நடிப்பவனே! தென்பாண்டி நாட்டையுடையவனே! துன்பப் பிறப்பை அறுப்பவனே! ஓவென்று முறையிட்டுத் துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, அவனது திருவடியின் மீது பாடிய பாட்டின் பொருளையறிந்து துதிப்பவர், எல்லோரும் வணங்கித் துதிக்க, சிவநகரத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ் சென்று நிலைபெறுவர்



திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம

Tuesday, May 24, 2011

கந்த சஷ்டி கவசம்...


அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது தேவராய சுவாமிகளால் பாடப்பெற்ற கவசமாகும். பாராயணம் செய்வோர்க்கு நோய் நிவர்த்தி, காரிய சித்தி, வெற்றித் திறன் அருளும் அரிய கவசமாகும். 





கந்த சஷ்டி கவசம்...

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
இதனை மனமுருகிபாட கேட்டது கிடைக்கும்,நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.......

ஞானவேல் முருகனுக்கு அரோகரா..

Thursday, April 14, 2011

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்


27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்


நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. 

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.  
  
 மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்  கர்ம வினையே -  லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து -  பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது. 
நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும். 
உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும்.  

ஆலயங்களும், அமைவிடங்களும் :

அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்




இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளதுபஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீதூரத்தில் கோயில் உள்ளது.

பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் 

 
 இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.

 கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

 

 இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். 

ரோஹிணி -  அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
 

 இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

மிருக சீரிஷம் -  அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்

 

 இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் 
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம். 


திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய 
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.


பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
  
 


இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது. 

ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்

 
 இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
  
 

இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் 


 
  இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது. 

உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
  
 

இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
  
 
 இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது. 

சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் 


 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
  
 

 இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் 


 
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில் 

 
 இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. 

கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் 


 
 இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
  
 

 இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

பூராடம் -  அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்

 
 இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 


 
 இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

திருவோணம் -  பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்

 

இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள 
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்


அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில் 


 
 இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது.. 

சதயம் -  அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்

 
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.


பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
  


இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது. 

உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் 


 
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ. 

ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் 


 
 இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.


Read more: http://www.livingextra.com/2010/12/27.html#ixzz1JVxa3tQT